Sunday, June 09, 2019

இந்த அநியாயத்த எங்க போய் சொல்ல


தோழியர் இருவரும் ஒன்றாக கதை பேசிக் கொண்டே உணவருந்திக் கொண்டிருந்த போது, திடீரென ஒரு அலைபேசி அழைப்பு.
“அம்மா, வீடு தெறந்து இருக்கு. அக்கா வீட்ட பூட்டாமலேயே போய்ட்டா போல இருக்கு. எனக்கு ரொம்ப பயமா இருக்கு” என்று எதிர் முனையிலிருந்து குழந்தை கூற, உடனே அக்காவை  வரச்சொல்வதாகவும் வீட்டில் வைத்த பொருள் வைத்த இடத்தில் இருக்கிறதா என்பதை சரி பார்க்கும்படியும் சொல்லி அழைப்பைத் துண்டித்துவிட்டு மூத்தவளுக்கு உடனே அழைத்து சரமாரியாக அர்ச்சனை செய்தாள் மாலினி.
‘இவ்வளவு பெரிய பொண்ணா இருக்க, வீட்ட ஒழுங்கா பூட்டீட்டு போகணும்னு தெரியாதா? பூட்டி முடிச்சதும் இழுத்துப் பார்த்துட்டுதானே நகரணும்னு படிச்சு படிச்சு கிளிப்பிள்ளைக்கு சொல்றது மாதிரி  சொல்லி இருக்கேனில்ல? இப்ப வீடு திறந்திருக்குனு பாப்பா கால் பண்றா. அவ வேற பயந்துட்டு இருக்கா. சீக்கிரமா வீட்டுக்கு போய்ட்டு திருடன் எவனாச்சும் வந்துட்டு போன அடையாளம் இருக்கானு பாத்துட்டு சொல்லு’ என்று இடி விழுந்தார்போல் முழங்கிவிட்டு அழைப்பைத் துண்டித்து பின் அருகிலிருந்த கீதாவி்டம் புலம்ப ஆரம்பித்தாள்.
"இந்த பொண்ணுக்கு எவ்வளவு சொன்னாலும் ஒரே விளையாட்டுத்தனம்தான்.  ரொம்ப அசால்ட்டா இருக்கா, அ்ப்டியே அவங்க அப்பா மாதிரி" என்று அவளது கணவனையும் சைக்கிள் கேப்பில் திட்டிவிட்டு, பின்னர் இளையவளுக்கு அழைத்து மூத்தவள் வருவதை சொல்லிவிட்டு அப்படியே வைத்த பொருட்கள் வைத்த இடத்தில் இருப்பதையும் குழந்தையிடம் கேட்டு  உறுதி செய்து கொண்டு மீண்டும் உணவு உண்ணத் தொடங்கினர். அவர்கள் சாப்பிடும் வேளையில் கொஞ்சம் கொசுவர்த்திச்  சுருள்கள் சுழல ஃபளாஷ் பேக் பார்க்கலாம்.


அது பிப்ரவரி 19 2018. மாணவர்களுக்கு ரிவிசன் பரீட்சைகள் நடந்து கொண்டிருந்த சமயம். ஒன்றுவிட்டு ஒரு நாள் தேர்வுகள் நடக்கும். அந்த செவ்வாய் அன்று மாணவர்களுக்கு தேர்வுக்கு தயார் செய்வதற்கான விடுமுறை நாள் என்பதால்  ஆசிரியர்களுக்கு மட்டும் பள்ளி செயல்பட்டது. பள்ளியில்  கீதாவும் மாலினியும் வகுப்பிற்குச் செல்லும் நேரம் தவிர  எப்போதும் ஒன்றாகவேதான் இருப்பார்கள். மாலினி விளையாட்டு ஆசிரியை. 2 பெண் குழந்தைகள். குழலினி 7-ம் வகுப்பு, தமிழினி  4-ம் வகுப்பு. கணவர் கிருஷ்ணன். அவரும்   விளையாட்டு ஆசிரியர்தான் ஆனால் நீண்ட தூரம் பயணித்துச் சென்று பணியாற்றி வீடு திரும்புபவர். கிட்டத்தட்ட மாலினிதான் ஒரு நாளின் மொத்த வேலைகளையும் பொறுப்புகளையும் சுமக்க வேண்டிய நிலமை. காலை 6 மணிக்குள்ளாக சமைத்து மு்டிக்க வேண்டும். இரவு 9 அல்லது 9.30 மணிக்கு திரும்ப வரும் கணவருக்கு  தேவையான உணவுகளை டப்பாவில் அடைத்துக் கொடுத்துவிட்டு பிறகு பிள்ளைகளை எழுப்பி அவர்களை கிளப்பிவிட்டு இவர்கள் மூவருக்குமான காலை உணவை சாப்பிட்டு மதிய உனவை பேக் செய்து கொண்டு காலை 8 மணிக்கு பள்ளியின் வருகைப் பதிவேட்டில் கையெழுத்து போடுவதுதான் அவளது வழக்கம்.

அன்று  இ்ளையவளை பள்ளிக்கு மாலினி தன்னுடனேயே அழைத்து வந்தாயிற்று. மூத்தவள் அவளது தோழி வீட்டிற்குச் சென்று படிப்பதாகச் சொல்லி மாலினியுடன் வராமல் காலை 9 மணி அளவில் வீட்டைப் பூட்டிவிட்டு அம்மாவிடம் அழைத்து தான் கிளம்புவதை தெரிவித்துவிட்டு சென்றாள். இளையவள் ஒரு மணி வரை அங்கேயே இருந்து தேர்வுக்கு தயார்படுத்திக் கொண்டிருந்தாள்.

மதிய உணவை முடித்ததும் அவளுக்கு தூக்கம் கண்ணைச் சுழற்றிக்கொண்டு வர, பள்ளியில் இருந்த அட்டண்டர் ஒருவருடன் இவளை வீட்டிற்கு அனுப்பிவிட்டு கீதாவும் மாலினியும் சாப்பிட உட்கார்ந்தார்கள்.

ஃபளாஷ் பேக் முடியவும் இதோ  குழலினியிடமிருந்து அழைப்பு வந்துவிட்டது. எல்லா பொருட்களும் சரியாகத்தான் இருப்பதாகவும், பீரோ மட்டும் திறந்திருப்பதாகவும், ஆனால் பீரோவில் வைத்த பொருட்கள் கலைக்கப்படாமல் அப்படியே இருப்பதாகவும் சொல்ல, மாலினிக்கு பீப்பீ எகிறியது. இன்னும் அரை மணியில் பள்ளி முடிந்துவிடும் என்பதால் இருவரையும் வீட்டில் பத்திரமாக இருக்கும்படி சொல்லிவிட்டு பள்ளியில் மீதமிருந்த வேலைகளை முடித்துவிட்டு 2.50 மணி அடித்ததும் கீதாவும்  மாலினியும்  ஸ்கூட்டியில் பறந்தனர்.

வீட்டிற்குள் நுழைந்ததும் மாலினி பீரோவில் வைத்திருந்த நகைகளையும் இதர முக்கியமானவற்றையும் சரி பார்த்துவிட்டு கீதாவிடம் நிம்மதிப் பெருமூச்சு விட்டு எல்லா பொருட்களும் வைத்த இடத்தில் பத்திரமாக இருப்பதாக சொல்லி கீதாவின் கணவர் வரும் வரை இருவரும் பேசிக் கொண்டிருந்தனர். கணவரின் வண்டி  ஹாரன் சத்தம் கேட்டதும் மாலினியிடம் விடைபெற்றுக் கொண்டு விடுவிடுவென 2 மாடிகளைக் கடந்து கீதா கணவருடன் புறப்பட்டாள்.

இரவு 8.30 மணிக்கு சமையலறையில் மிகவும் சுறுசுறுப்பாக சப்பாத்தி குருமா  என்று கீதா தன் கைப்பக்குவத்தை கணவருக்குக் காட்ட எண்ணி அ்டுப்பில் கவனமாய் இருக்க, அவளது கணவனோ வீட்டிற்குள் நுழைந்தும் நுழையாததுமாக இவள் பெயரை சங்கீதம் போல் இசைத்துக் கொண்டே வந்தார். "என்ன மிஸ்டர் தினேஷ்? இன்னைக்கு புதுசா பேர ஏலம் விட்டுட்டே வரிங்க? ஆ்பீஸ்ல ஏதாச்சும் புதுசா யாராவது பொண்ணு ஜாயின் பண்ணி இருக்கா?" என்று சிரித்துக் கொண்டே கேலியாகக் கேட்டாள்.

"ஏ! அப்டி எல்லாம் ஒரு நல்ல விசயம் நடந்துச்சுனா நான் எதுக்கு உன்னோட பேர இவ்வளவு குசியா கூப்பிடறேன். அந்த புது ஃபிகரோட பேர இல்ல பாட்டா படிச்சிருப்பேன்" என்று பெரு மூச்சு விட, கையில் வைத்திருந்த சப்பாத்திக் கட்டையை அவனை நோக்கி ஓங்கினாள் கீதா. "ஐயையோ, வெயிட் வெயிட். மாலினி..." என்றதும் பூரிக்கட்டை சட்டெனக் கீழே இறங்கியது. மிகவும் படபடப்பாக "மாலினிக்கு என்ன?" எனக் கேட்டாள் கீதா. "அ்டேங்கப்பா... உயிர் தோழி பேர சொன்னதும் கட்டுன புருசனக்கூட மறந்துட்டு அப்டியே இதயம் பயங்கரமா துடிக்குதே"னு கேலி செய்தான் தினேஷ். ‘சரி சரி, அவங்களுக்கு என்னாச்சு?’ என்று பொறுமை இழந்து கேட்டாள் கீதா.

துடிக்காதா பின்ன? கீதா மாலினியை விடவும் 7 வயது சிறியவள். 2013ஆம் ஆண்டு பள்ளியில் இசை ஆசிரியராக சேர்ந்த முதல் நாளில் இருந்து இன்றய தேதி வரை கீதாவுக்கு எல்லா வகையிலும் உறுதுணையாக இருப்பது மாலினிதான். மாலினிதான் கீதாவுக்கு முழு பள்ளியையும் ஒரு நாள் சுத்திக் காண்பித்தாள். அதன் பிறகுதான் கீதாவுக்கு ஒரு பெரிய  நம்பிக்கையே வந்தது. எல்லாக் குழப்பங்களும் தீர்ந்து சுதந்திரமாகவும் யாருடைய உதவியும் இல்லாமலும் பள்ளியை வலம் வந்து கொண்டிருக்கிறாள். பார்வைச் சவாலை சந்திக்கும் கீதாவிற்கு பள்ளியில் சேர்ந்த 2 மாதங்களில் ஒரு சமயம் ஒரு வினோதமான பிரச்சனை வந்தது. கால அட்டவணையின்படி அந்த குறிப்பிட்ட பீரியட் கீதாவுக்கு வகுப்பு இல்லை என்பதனால் அன்று அவளை மாலினி முதன்முதலாக மைதானத்திற்கு அழைத்துச் சென்றிருந்தாள். ஆனால் ஆசிரியர்கள் பற்றாக்குறையால் ஒரு குறிப்பிட்ட வகுப்புக்கு அவளை அனுப்பி வைக்கத் தீர்மானித்த தலமை ஆசிரியர் கீதாவைத் தேடி ஆள் அனுப்பி இருக்க, கீதா மைதானத்தில் இருப்பாள் என்பதை யூகிக்காமல் மொத்த பள்ளியையும் அலசிவிட்டு கீதாவைக் காணவில்லை என்று தலமையிடம் செய்தி போக, கீதாவை அட்டவணையுடன் வரச்சொன்ன தலமை, அந்த பீரியட் வகுப்பு இருப்பதாக அட்டவணையில் இருக்க எப்படி வகுப்புக்குப் போகாமல் மைதானம் போவாய் என்று கீதாவுக்கு ஒரே ஃபையரிங். இதைக்கேட்டு குழம்பினாள் கீதா. ஞாயம்தானே! காலையில் மாலினிதான் அட்டவணையைப் படித்துக் காட்டினாள். அந்த பீரியட் வகுப்பு இல்லை என்பதை உறுதி செய்து கொண்டுதான் மை்தானத்திற்கும் போனார்கள்.

தலமையிடம் எதுவும் பேசாமல் வந்து கொண்டிருந்த கீதாவை எதிர் கொண்ட மாலினி, ‘என்னாச்சு? எங்க போய்ட்டு வரீங்க?’ன்னாள். அட்டவணையைக் காட்டி நடந்ததை விவரித்தாள் கீதா. ஒரு நிமி்டம் மாலினி ஆச்சர்யத்துடனும் வேதனையுடனும் ‘உங்கள நல்லா ஏமாத்தி இருக்காங்க. அந்த பீரியட் உங்களுக்கு ஃபிரீதான். நான் பாத்துக்கறேன்’ என்று மாலினி நேராக தலமையிடம் போய் சண்டை போட்டாள். இப்படி ஒரு தோழிக்காக இதயம் துடிக்காமலா இருக்கும்?   

மெதுவாக நடந்ததைச் சொல்ல ஆரம்பித்தான் தினேஷ். குழலினியோட அப்பா கால் பண்ணி  கொஞ்சம் வீடு வரைக்கும் ஒரு எட்டு பார்த்துட்டு வாங்கன்னார். "அங்க போனா, ஹும், என்னத்த சொல்றது? எல்லாரும் பீதியில பேதியாகுற அளவுக்கு பயத்துல இருக்காங்க" என்று நி்றுத்தினான். "ஏங்க, என்னாச்சு? அதுதான் எல்லா கலவரமும் மு்டிஞ்சு சாயங்காலம் நான் வரப்பவே நல்லாதான இருந்தாங்க. அதுக்குள்ள என்ன?"  என்றதும், "அந்த கூத்த ஏன் கேக்குற? நீ வந்ததும் மாலினி சமையல்கட்டுக்குள்ள போச்சாம். சிங்க்ல தோசக்கல்லு இருக்கவும் சரி பிள்ளைங்க யாராச்சும் தோசையோ ஆம்லேட்டோ போட்டு சாப்பிட்டு இருப்பாங்கனு கொஞ்ச நேரம் கழிச்சு 2 புள்ளைங்களையும் கூப்ட்டு விசாரிச்சிருக்கு. யாரும் தோசை சுடாதது, ஆம்லேட் போடாதது கன்பாமாயிடுச்சு.  பிரிட்ஜ்ல பால் எடுக்கப் போனப்போ 12 முட்டையில ஒண்ணே ஒண்ணு மட்டும் மிஸ்ஸிங்! நேத்துதான் மளிகை சாமான் வாங்கிட்டு வந்து சரியா 12 முட்டைகள் அடுக்கி வச்சதா நல்லா ஞாபகப்படுத்தி பார்த்தாச்சுனு கூட சொல்லி ஒரே ஃபீலிங்.  சரி எதுக்கும் குப்பைக் கூடையில பார்க்கலாம்னு பார்த்தா சரியா ஒரே ஒரு முட்டை ஓடு மட்டும் உள்ள இருக்கு! எல்லாம் ஒரே மாயமா இருக்குனு ஒரே குழப்பத்துல இருக்குங்க’ சொல்லி முடித்தான் தினேஷ்.
"என்னங்க? விட்டலாச்சாரியா படத்துல  வரது மாதிரி இல்ல இருக்கு? குழலினிதான் தனியா  ஆம்லேட்லாம்  போடுவா, ஆனா அவ பொய் சொன்னா ஈசியா கண்டுபு்டிச்சிடலாம். அப்டி நடந்திருக்க வாய்ப்பில்லை" என்று கீதா ஆச்சர்யமாகக் கேட்க, ‘அதிசயமோ ஆச்சர்யமோ எல்லாம் ஒண்ணுமில்லம்மா, அது ரொம்ப சிம்பிள்!" என்று தினேஷ்  சிரிக்க, ‘என்னங்க, புரியலையே!’ என்று கீதா முழிக்க, ‘அது ஒண்ணுமில்ல, மாலினி ஃபெரெண்டு மோகினி வந்திருக்கும். சரி நம்ம மாலினிதானே, ஊருக்கெல்லாம் வாரி வாரி குடுக்குதே, நம்ம ஒரு முட்டதானே ஆம்லேட் போட்டுக்கப்போறோம்!  சரி, இன்னைக்கு நம்ம போட்டு சாப்பிட்டு டெஸ்ட் பண்ணி நல்லா வந்துச்சுனா நாளைக்கு மாலினிக்கும் போட்டு வைக்கலாம்னு ஐடியா பண்ணி வொர்க்கவுட் பண்ணியிருக்கும். நாளைக்கு மாலினி  ஸ்கூல்ல இருந்து வந்ததும் கண்டிப்பா மோகினி போட்ட ஆம்லேட் டைனிங் டேபுல்ல ரெடியா இருக்கும்! ஹூம்! யாருக்குத் தெரியும், படிப்படியா மாலினியோட சமயல் வேலை மொத்தமும் மோகினியே டேக் ஒவர் பண்ணினாலும் ஆச்சர்யப்படறதுக்கு இல்ல!’ என்று சொல்லி முடித்து வயிறு குலுங்க சிரித்தான் தினேஷ்.

கீதாவுக்கு தினேஷ் சொல்லிக்கொண்டிருக்கும் போதே கடுப்பு கடுப்பாக வர, ‘ஒருத்தவங்க பயப்படறது உங்களுக்கு அவ்வளவு விளையாட்டா இருக்கா?’ என்று சீற, மறுபடியும் விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்தான் தினேஷ். ‘மறுபடியும் என்ன சிரிப்பு? அதுதான் மொத்தமா என்னவோ மோகினி  கூட பத்து வருசம் பழகின மாதிரி மோகினியோட திட்டத்தை எல்லாம் சொல்றீங்களே! இன்னும் என்ன இளிப்பு? மிச்சத்தையும் சொல்லி முடிங்க!’ என்று பொய்யான கடுகடுப்புடன் அதிர்ந்தாள் கீதா.

"அது இல்லம்மா.... எனக்கு என்னவோ ஒண்ணு தோணுது, எங்க மோகினி சமயல் வேலையோட ஸ்டாப் பண்ணாம நம்ம கிருஷ்ணனையும் டேக் ஓவர் பண்ணிடுமோனு பயமா இருக்கு. அவரு ஏற்கனவே மாலினிய கட்டிகிட்டே பாடாப்படறாரு, இதுல மோகினி வேறயா? இருந்தாலும் மனுசனுக்கு எங்கையோ மச்சம் இருக்கு! எனக்கே கொஞ்சம் பொறாமையாதான் இருக்கு"  என்று குரலில் ஒரு அன்பும் அக்கறையும் தொனிக்க சொல்லி முடித்து குலுங்கிக் குலுங்கி சிரித்தான் தினேஷ்.   
"இருக்கும் இருக்கும்! ஏன் இருக்காது? கையில என்ன இருக்குனு பாத்தீங்க இல்ல? இப்ப அப்டியே இந்த கரண்டிய வச்சு அந்த வாய் மேல 4 இழுப்பு இழுத்தா அப்பறம் தெரியும் மோகினி எப்டி டேக் ஓவர் பண்ணும்னு!" என்று கீதா அதட்ட, ‘ஹே! சும்மா ரொம்ப ஓவரா அந்த கரண்டிய வச்சு பூச்சாண்டி காட்ற வேலையெல்லாம் வச்சுக்காத. அப்பறம் நான் 4 இழுப்பு இழுத்தா கரண்டி இருக்கற எடமே தெரியாம போய்டும்" என்று கீதாவின் இடுப்பை வளைத்தான் தினேஷ். "ஐய்யே! ஆசையப்பாரு, போய் சட்டுபுப்ட்டுனு குளிச்சுட்டு வாங்க. சாப்பாடு மொதல்ல முடியட்டும். அப்பறம் இதெல்லாம்  யோசிக்கலாம்" என்று அவனை விரட்டிவிட்டு தன் கணவனின் நகைச்சுவை உணர்வை நினைத்து தனக்குத்தானே பூரிப்போடு சிரித்துக் கொண்டு சப்பாத்தியை போட்டு முடித்தாள்.

4 comments:

  1. பழய சாமு அக்கா திரும்பியாச்சு.

    ReplyDelete
    Replies
    1. என்னது? பழைய சாமு அக்காவா? நான் என்னவோ தினமும் புதுசா இருக்கரது மாதிரி இல்ல நினைச்சுக்கிட்டு இருந்தேன்!.... அவ்வ்வ்வ்வ்... நன்றி அரவிந்த்!

      Delete

Popular Posts