Tuesday, January 01, 2019

2019- ன் தொடக்கமும், கவிப்பூரணியின் வலைப்பயணத் தொடர்ச்சியும்....



அன்பு மனம் கொண்டு ஆவலோடு கவிப்பூரணியின் வலைப்பூவில் மணம் பரப்ப அடி எடுத்து வைக்கும் அனைத்து வாசகர்களுக்கும் என் பணிவான மார்கழித் திங்கள் 17ஆம் நாள் மற்றும்
2019 ஆம் ஆண்டு முதல் நாள் வாழ்த்துக்களும்,  வணக்கங்களும் உரித்தாகின்றன.



ஆங்கில நாள்காட்டியின்படி ஆண்டின் முதல் நாள் இனிதாக தொடங்கிவிட்டது. உலகமே ஒரு பெரும் திருவிழாவாகக் கொண்டாடும் இந்த நாளில் என்னை ஒரு மகாராணியாக  கொண்டாடிய
வலைப்  பதிவுலகில் மறுமலர்ச்சியுடனும் புதுப் பொலிவுடனும் பாதியிலேயே  விட்டுப்போன எனது பதிவுலகப்  பயணத்தை மீண்டும் தொடர வந்திருக்கிறேன்.

"என்னது? ஏற்கனவே பதிவெல்லாம் எழுதி இம்ச படுத்தினது போதாதுனு  இப்ப மறுபடியும்  தொடர வந்திருக்கியா? அப்போ யாரு நீ?" என்ற உங்கள் மனதின் குரல்  கேட்கிறது.
கீழே படிச்சுகிட்டே வாங்க, அப்பறம் தெரியும் நான் யாருனு.

2012 ஆம் ஆண்டு ஜூன் 30 முதல் செப்டம்பர் 20 வரை அன்பு தம்பி திருப்பதி மகேசு அவரது துணையோடு   சிந்தனைச் சி்றகுகள் வலைப்பூவில்  எனது சிந்தனைகளை திருமதி சாமுண்டீஸ்வரி
பார்த்தசாரதி என்ற சொந்தப் பெயரில்   பதிவு செய்து வந்தேன். 3 மாதங்களில் அலாதியான வரவேற்பு,   நலம்விரும்பிகள் என்று  நாங்கள் மிகவும் திணறித் தான் போய் இருந்தோம்.
ஏதோ ஒரு ஆர்வக்கோளாறில் தொடங்கிய வலைப்பூ என்றாலும் எனக்கான ஒரு அடையாளத்தை அந்த தளம் பெற்றுத் தந்தது. தவிர்க்க இயலாத சில காரணங்களால் அந்த வலைப்பூவில் என்னால்
தொடர முடியவில்லை.
மீண்டும் அதே ஆண்டு அக்டோபர் 1, சுடர்விழி என்றொரு வலைப்பூ தொடங்கி மார்ச் 2013 வரை எழுதி வந்தேன். தொடர்ந்து எழுத  அப்போதைய சூழ்நிலையில் என் மனநிலை இடமளிக்கவில்லை.
பின் 2013 ஆம் ஆண்டு ஆசிரியர் வேலை கிடைத்து வாழ்க்கை வேறு திசையில் பயணிக்க ஆரம்பி்த்தது.

"ஆடின காலும் பாடின வாயும் சும்மா இருக்காது" அப்படினு ஒரு பழமொழி எங்க அம்மா அடிக்கடி சொல்லக் கேட்டு இருக்கேன். அது போல என்கிட்ட பாட்டு கத்துக்க ஜெயபுஷ்பலதா
என்று ஒரு மேடம் வந்தாங்க. அவங்க தமிழில் முதுகலை முடிச்சதா ஒரு நாள் பேச்சு வாக்கில சொல்ல, நானும்  ஒரு  ஆர்வத்துல  கவிதைன்ற பெயரில் முன்பு வலைப்பூ காலத்தில்
எழுதி வைத்திருந்த சிலவற்றைக் காட்ட அவங்க சொன்ன சில விசயங்கள் என்னை கவிதை எழுத தூண்டியதோடு மட்டுமல்லாமல்  எங்கெங்கெல்லாம் பிழைகள் ஏற்படுகிறது, எங்கெங்கெல்லாம்
மேம்படுத்திக் கொ்ள்ள  முடியும் என்பது போன்ற பல விசயங்கள் அவர்களோடு உரையாடும் பொழுது  புலப்படத் தொ்டங்கியது.  அவர்களுடனான தொடர்பு ஒரு கால கட்டத்திற்கு மேல்
குறைய ஆரம்பித்தப் பிறகு நானும் கவிதைகளைப் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். அவசியம் ஏற்படும் போது மட்டும் பாடல்கள் எழுதுவது, தோன்றும்
போது கவிதைகள் எழுதுவது என்று இருந்து வந்தேன். 

2018 ஆம் ஆண்டு ஒரு சகோ மூலம் ஆஸ்திரேலியா வாழ் தமிழர் திரு கு. சங்கரலிங்கம் என்றவர் அறிமுகமானார். என்ன சொல்வது? அவரும் கவிதைகள் நன்றாக எழுதுவார். நல்ல சிந்தனையாளர்.
நான் அவருடைய கவி்தைகளை வாசிக்க ஒரு புது உற்சாகம் பிறந்து மீண்டும் எழுதத் தொ்டங்கிவிட்டேன். நாம் என்றோ ஒரு நாள் நேசித்து செய்த ஒரு விசயம், நாம் வேண்டாம்
என்று விட்டு விலகிப் போனாலும் அந்த விசயம் வி்டாமல் நம்மை  நம் வாழ்வில் சந்திக்கும் நபர்கள் மூலம் தொடர்ந்து  துரத்திக் கொண்டு பன்மடங்கு நேசத்துடன் வரும்
போல என்றே என் வாழ்வில் நான் சந்தித்த இந்த இருவர் மூலம் பல நாட்கள் உணர்ந்திருக்கிறேன்.

எல்லாவற்றிற்கும் மேலாக, எனக்குள் எழுத்து ஒரு ஊடகமாக இருக்கிறது என்று நான் உணரும் முன்பே கண்டறிந்த என் தம்பி  மகேசு அவனது அன்பும் ஆசையும் நான் மீண்டும்
வலைப்பூ தொடங்க வேண்டும் என்று தீவிரமாக   இறங்குவதற்கு உறுதுணையாய் இருக்கிறது.

எனக்கு நானே ஒரு பெயர் வைத்துக் கொண்டால் எப்படி இருக்கும்னு சின்ன வயசில நிறைய நாள் யோசிச்சதோட விளைவோ என்னவோ தெரியல கவிதை என் வாழ்வின் ஒரு அங்கம்னு  முடிவு
செய்த பிறகு எனக்கு நானே சூடிக்கொண்ட பெயர் கவிப்பூரணி. குறிஞ்சி மலர் என்ற தீபம் நா. பார்த்தசாரதி  அவரது  புதினம் என்னை வெகுவாகக்  கவர்ந்தது. அதில் வரும்
பூரணி அரவிந்தன்  கதாப்பாத்திரங்கள் நிச்சயமாக வாசகர்கள் மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தாமல் இருந்திருக்க மு்டியாது. அதனாலேயே புனைப்பெயர் என்று யோசித்ததும்
எனக்கு இந்த கவிப்பூரணி என்ற  பெயர் தோன்றியது.

சரி சரி இதுக்கும் மேல உங்கள போர் அடிக்க வேணாம்... நீங்களும் எவ்வளவுதான் தாங்குவீங்க? நம்ம வலைப்பூவில் கவிதைகள், பதிவுகள் மட்டுமில்லாமல் பாடல்களும் இடம்பெறும்
என்று என் அளவில்  மிகுந்த மகிழ்வுடனும், உங்கள் அளவில் மிகுந்த வருத்தத்துடனும் தெரிவித்துக் கொள்கிறேன். "என்னது பாடி வேற தொல்ல பண்ணப்போறியா?"னு அப்டியே
மயங்கி விழுந்திடாதீங்க. எதையும் தாங்கும் இதயம் ரொம்ப முக்கியம்.
 சாமுசாரதி [chamusarathy]

 என்று எனக்கொரு யூடியூப் சேனல் தொடங்கி இருக்கிறேன். நேரம் கிடைக்கும்
போது பாடல்கள் பாடி தரவேற்றம் செய்வேன். அதையும் இங்கு பகிர்ந்து கொள்வதாக உத்தேசம்.

இன்னைக்கு கோட்டாவ இத்தோட மு்டிச்சுகிட்டு மீண்டும் ஒரு நல்ல சந்தர்ப்பத்தில் உங்களுடன் கவிப்பூரணி திருமதி சாமுண்டீஸ்வரி பார்த்தசாரதியாக  உறவாடி மகிழ வருகிறேன்.
தங்களது பொறுமையான வாசிப்பிற்கு மனமார்ந்த நன்றிகள். மீண்டும் தங்களை சந்திக்கும் வரை  வாழ்வை கொண்டாடிக் கொண்டு ஆனந்தமாக உலா வாருங்கள்....


2 comments:

Popular Posts