விண்ணில் மண்ணில் தீ காற்று நீரில்
தங்கும் அன்பின் ரீங்கார நாதம்
இன்பம் பொங்கும் பாட்டாக நாளும்
பாடி விரிந்திடும் படைப்பெனவே!
கண்கள் ரெண்டில் காணாத ஆற்றல்
தள்ளும் அள்ளும் ஊனோடு மூச்சில்
பங்கும் கொள்ளும் நாமேவும் பேச்சில்
காற்று மலர்த்திடும் இசையமுதை!
புல்லும் புழுவும் வேரூன்றி வாழ
பச்சை மரங்கள் வானேறி வளர
செந்நெல் வயல்கள் பாரெங்கும் பரவ
ஆகி இருந்தி்டும் நிலமெனவே!
கொஞ்சும் முகிலதன் சாரல்கள் தூவி
நித்தம் உயிர்களின் தாகத்தைப் போக்கி
கொட்டும் அருவியாய் ஆறாய் கடலாய்
து்ள்ளி எழுந்தி்டும் நீரெனவே!
கற்கள் உரசிட தோன்றிய ஒளியே
வெப்பம் தந்துரு வாக்கும் அணங்கே
தங்கக் கதிரவன் ஊடாய் எரிந்தே
நாடி இயக்குது நெருப்பதுவே!
வெட்ட வெளியென ஓங்கும் உயர்வே
எங்கும் கி்டந்திடும் நீங்கா இடமே
சக்தி உலவி்ட ஞானியர் யாவரும்
ஆடி வணங்குவர் ஆகாயம்தன்னை!
வாழிய வாழிய நீவிர் ஐவரும்
வாழ்வு வளமுற பூமி நலம்பெற
தோழமை காக்க ஆற்றல் ஐந்ததன்
மகிமை போற்றுக நிதமும் வாழ்த்துக!
-கவிப்பூரணி
பஞ்ஜபூதங்கல் பட்றி எத்துணை அழகான கவிதை. ப்ப்பா வேர லெவல் மேடம்.
ReplyDeleteஎன்னப்பா, தமிழில் கருத்திட்டு அசத்துகிறீர்? மிக்க நன்றி!
Deleteஇந்த ஆற்றல் அருமை...
ReplyDeleteதொடர வாழ்த்துகள் சகோதரி...
மிக்க மிக்க நன்றி சார்
Deleteகவிதை நன்றாக இருக்கிறது....இந்த உடல் கூட பஞ்சபூதங்களின் படைப்புதான்...
ReplyDeleteநன்றி நவீன்.... பஞ்சபூதம் இல்லாமல் எதுவுமே இல்லை...
Deleteதுளசிதரன் : எனக்கு கவிதை எல்லாம் அவ்வளவாக எழுத வராது. நீங்க ரொம்ப அழகாக எழுதுகின்றீர்கள். அருமை.
ReplyDeleteகீதா: செமையா எழுதியிருக்கீங்க சுடர்!! எப்படி அழகா எழுதறீங்க சூப்பர்பா..பஞ்சபூதங்களின் சக்தி அந்த ஆற்றலை சொல்லிட முடியுமா...அந்த ஆற்றைலை எழுதும் ஆற்றல் உங்களிக்கு இருக்கே! வாழ்த்துகள்!
துளசி சார்- அதுதான் கவிதை மாதிரி அழகான புதினமே படச்சுட்டீங்களே.... இன்னும் என்ன சார்? பாராட்டுக்களுக்கு நன்றி...
Deleteகீதா அக்கா- பஞ்ச பூதத்தின் ஆற்றல் நிச்சயம் நம் அறிவுக்கும் கற்பனைக்கும் அப்பாற்பட்டது. சும்மா ஒரு கடுகளவு முயற்சியில் என் மூலம் வெளிப்பட்ட பாடல். அவ்வளவே... மிக்க நன்றி.