தோழியர் இருவரும் ஒன்றாக கதை பேசிக் கொண்டே உணவருந்திக் கொண்டிருந்த போது, திடீரென ஒரு அலைபேசி அழைப்பு.
“அம்மா, வீடு தெறந்து இருக்கு. அக்கா வீட்ட பூட்டாமலேயே போய்ட்டா போல இருக்கு. எனக்கு ரொம்ப பயமா இருக்கு” என்று எதிர் முனையிலிருந்து குழந்தை கூற, உடனே அக்காவை வரச்சொல்வதாகவும் வீட்டில் வைத்த பொருள் வைத்த இடத்தில் இருக்கிறதா என்பதை சரி பார்க்கும்படியும் சொல்லி அழைப்பைத் துண்டித்துவிட்டு மூத்தவளுக்கு உடனே அழைத்து சரமாரியாக அர்ச்சனை செய்தாள் மாலினி.
‘இவ்வளவு பெரிய பொண்ணா இருக்க, வீட்ட ஒழுங்கா பூட்டீட்டு போகணும்னு தெரியாதா? பூட்டி முடிச்சதும் இழுத்துப் பார்த்துட்டுதானே நகரணும்னு படிச்சு படிச்சு கிளிப்பிள்ளைக்கு சொல்றது மாதிரி சொல்லி இருக்கேனில்ல? இப்ப வீடு திறந்திருக்குனு பாப்பா கால் பண்றா. அவ வேற பயந்துட்டு இருக்கா. சீக்கிரமா வீட்டுக்கு போய்ட்டு திருடன் எவனாச்சும் வந்துட்டு போன அடையாளம் இருக்கானு பாத்துட்டு சொல்லு’ என்று இடி விழுந்தார்போல் முழங்கிவிட்டு அழைப்பைத் துண்டித்து பின் அருகிலிருந்த கீதாவி்டம் புலம்ப ஆரம்பித்தாள்.
"இந்த பொண்ணுக்கு எவ்வளவு சொன்னாலும் ஒரே விளையாட்டுத்தனம்தான். ரொம்ப அசால்ட்டா இருக்கா, அ்ப்டியே அவங்க அப்பா மாதிரி" என்று அவளது கணவனையும் சைக்கிள் கேப்பில் திட்டிவிட்டு, பின்னர் இளையவளுக்கு அழைத்து மூத்தவள் வருவதை சொல்லிவிட்டு அப்படியே வைத்த பொருட்கள் வைத்த இடத்தில் இருப்பதையும் குழந்தையிடம் கேட்டு உறுதி செய்து கொண்டு மீண்டும் உணவு உண்ணத் தொடங்கினர். அவர்கள் சாப்பிடும் வேளையில் கொஞ்சம் கொசுவர்த்திச் சுருள்கள் சுழல ஃபளாஷ் பேக் பார்க்கலாம்.