Thursday, February 14, 2019

என்னைத் தொலைத்து!

பயனற்ற தரிசு நிலமாய்
நினைவற்று  நான்  இருக்க
தூரலின் துளி ஒன்றாய்
நனைத்தாய் என நினைத்திருக்க 

வெள்ளக்காடாய் நொடிப்பொழுதில்
உணர்வூட்டி உயிர் ஊற்றி
வித்திட்டு உறங்காது
காதலாகி உரமுமிட்டு
ஒரே தருணத்தில்
துளிர் விடும் விதையாக
மணம் கமழ் மலராக 
மலர் சூழ் வனமாக
விரல் சொடுக்கும் நொடிப்பொழுதில்
மின்னலாகிஆயிரம்  பல்லாயிரம்
மொழியாக்கத்திற்கு அப்பாற்பட்ட 
லட்சம் கவிதையாகி
லட்சியக் கனவாகி
அலட்சிய துணிவேற்றி
இலக்கியக் கவியாக்கி
வைத்தியம் செய்ய விரும்பா
பைத்தியம் என மாற்றி
என்னை உனதாக்கி
உன்னை எனில் ஏற்றி
என்னில் உனைத் தீட்டி
திக்குமுக்காடி திணற வைத்து
என் முகம் அதனின் முகவரியே 
உன் எழில் கொஞ்சும்  முகமாகி 
காணாமலே போகிறேன் போ!
மூழ்கி மூழ்கி உன்னுள்ளே
இறந்து இறந்து
பிறந்து பிறந்து
மகிழ்ந்து மகிழ்ந்து
நெகிழ்ந்து நெகிழ்ந்து
உனக்குள்ளேயே
சுகமாய் சுகிக்கிறேன் வா!
வா என்றும் போ என்றும்
கட்டிக்கொள் என்றும்
எட்டிக் கொல்   என்றும்
ஒன்றாய் சொல்லத் தோன்றியதே!
ஏதும் புரியாமல்
குழம்பித் தெளியாமல்
தெளிந்து குழம்பாமல்
வார்த்தை விளையாட்டை முடித்து
விரல்கள் விளையாட
கனியாய்க் காத்திருக்கிறேன்
தவங்கள் நிறைவேறும்
மோகத் தருணங்களுக்காய்!

-கவிப்பூரணி

6 comments:

  1. அருமை கவிப்பூரணி...மிகவும் ரசித்தோம்..

    கீதா

    ReplyDelete
  2. அழகான கவிதை ...
    மேலும் மேலும் வாசிக்கத் தூண்டுகிறது...!

    ReplyDelete
  3. சிறப்பான கவிதை. பாராட்டுகள்.

    ReplyDelete

Popular Posts