Monday, February 25, 2019

இதயவீணை!



காட்டாற்று வெள்ளமென பாய்ந்தோடும் சிந்தனையில் - பரவும்
ஏகாந்தம் தென்றலிடை பாய்போடும் வண்டினங்கள் - விரவும்
தீந்தேனில் முழுகிவிட எத்தனிக்கும் வேளையிலே - நிலவில்
காய்ந்தோங்கும் வெள்ளியலை புள்ளியிட்டு கோலமிட - மலரும்
தேன்தோய்ந்த செங்கமலம் அரும்பெடுத்த நொடிதனிலே - உலவும்
மீன்போன்ற கண்ணிரண்டில் கசிந்தொழுகும் நீர்த்துளிகள் - விலகும்
நீ தீண்டும் கணப்பொழுதில் இனித்துவிடும் அதிசயமோ? 


காற்றினாலும் சாய்ந்திராத என்மனதின் வேரினையே - மருகும் 
சுட்டுவிழி ஓரந்தனில் வீழ்த்தினையே! ஏந்தினையே! - இதழின்
புன்முறுவல் ஒன்றினிலே முத்தாடி மூழ்கவைத்து - இரவின்
ஏக்கமதில் மெய்யுருக உறக்கமின்றி  ஆழ்த்தினையே! - விரலின்
ஓர்நுனியின் நிழலதுவும் மேனியிலே பதியவில்லை! - அணலில்
வாட்டினையே வாடாத மலரவளின் உயிரதனை! - சருகும்
வேரூன்றி பூப்பூக்கும் உணர்விலினி நான் லயிப்பதென்ன?

கார்மேகம் நல்குகின்ற துளியதனில் உடைவதுவும் - கனவில்
வான்மேவும் கற்பனையில் காற்றாக மிதப்பதுவும் - இளமை
கூத்தாக நினைத்திருந்த காட்சியெலாம் நனவினிலே - உறவின்
மேடையிலே அரங்கேறும் அனுபவத்தின் புதுமையிலே - இதயம்
மீட்டுகின்ற வீணையதன் மயக்கந்தரும் ராகத்திலே - குலவும்
நாளதனின் பாங்கதனை காட்சியிலே  தேரேற்றி          - உருகும்
ஊன்ஊடாய் சித்தமதும் துடித்திருக்கச் செய்வதென்ன?

-கவிப்பூரணி

4 comments:

  1. ஹையோ எப்படி இப்படி அழகா எழுதறீங்கப்பா...செமையா இருக்கு மிகவும் ரசித்தோம்...

    கீதா

    ReplyDelete
  2. ரொம்பவும் சிறப்பாக வந்திருக்கிறது இக்கவிதை. பாராட்டுகள்.

    ReplyDelete

Popular Posts