உனது வருகையினால்
கிளர்ந்து எழுந்தது
ஆழ்நிலை உறக்கத்தின்
மயக்கத்தில் கிடந்த
உடலின் கூறுகள்
என்று மட்டும்தான்
எண்ணி இருந்தேன்
எனது கண்களின்
எல்லையில் இருந்து
உனது தோற்றம்
மறையும் தருணம் வரை!
இதயக் கடலின்
அடி ஆழத்தில்
மௌனத்தின் மடியில்
முயங்கிக் கிடந்த
ஏகாந்த உணர்வுகள்
அலை அலையாய்
விழிகளின் கரையில்
பலமாய் மோதியதன்
சிலிர்ப்பில் விளங்கினேன்
உள்ளூறும் கனவுகளை
தட்டி எழுப்பினை என!
தென்றலாய் மணம் வீசி
இதயத்தின் வாசல் வழி
அனுமதி இல்லாமல்
அணுஅணுவிலும் நுழைந்து
மிதமாய் உயிர் நீவி
ஆயிரம் சிறகுகள்
நொடிப்பொழுதில் உனை நோக்கி
தாவிப் பறந்து வர
உயிரோடு உயிர் சேர்த்து
நளினமாய் நடனமிட
ரசவாதம் நிகழ்த்திய கள்வனே!
மொழியின் பிழையென
பிழையாய் இருந்த
வஞ்சிக் கொடி என்னைக்
கவிதை நடையென
ரசித்து சுவைத்து
உள்ளங்கள் பறிபோகும்
சங்க இலக்கியமாய்
உள்ளம் கள் ஊற
தீண்டாமல் சங்கமித்து
மீளா இன்பத்தின்
அதிர்ச்சியில் ஆழ்த்தினையே!
- கவிப்பூரணி
காதல் - சிறப்பாக கவிதை வடித்திருக்கிறீர்கள். பாராட்டுகள் கவிப்பூரணி.
ReplyDeleteமிக்க நன்றி சார்!
Delete